இஸ்ரேல் விஜயத்தில் சிரியா மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகள் பற்றி அமெரிக்க ஜெனரல் விவாதம்

அமெரிக்காவின் முன்னணி ராணுவ அதிகாரி ஒருவர், கடந்த புதன்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை (11 – 13 டிசம்பர்) வரை முன்னணி இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்தார்.
சந்திப்பின்போது அவர் சிரியாவில் காணப்படும் நிலவரம் உட்பட அந்த வட்டாரம் சார்ந்த விவகாரங்களைப் பற்றிக் கலந்துபேசினார் என்று அமெரிக்க மத்திய தளபத்தியம் (Centcom) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஜெனரல் மைக்கல் குரில்லா, இஸ்ரேல் தற்காப்புப் படைகளின் தலைவர் லெஃப்டனென்ட் ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி, இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் ஆகியோரைச் சந்தித்தார் என்று சென்ட்காம் குறிப்பிட்டது.
சிரியாவில் காணப்படும் நிகழ்வுகள் குறித்து அமெரிக்காவுடன் நன்கு தொடர்பில் இருக்குமாறு வாஷிங்டன், இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சிரியாவில் சில நாள்களுக்கு முன்பு கிளர்ச்சியாளர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்தனர். அதனைத் தொடர்ந்து திரு அசாத் நாட்டிலிருந்து தப்பியோடினார்.
சிரியாவின் அடுத்த அரசாங்கம் அந்நாட்டுக்கு நிலைத்தன்மையைக் கொண்டு வருமா என்பதை அறிய உலகம் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறது. சிரியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போரில் நூறாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.