டிரம்பின் வர்த்தகப் போருக்கு மத்தியில் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ள அமெரிக்கா, சீனா

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போரைத் தணிக்க முற்பட அமெரிக்க, சீன அதிகாரிகள் இந்த வாரம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் மே 9 முதல் 12 வரை நடைபெறும் பேச்சுவார்த்தையில் சீனத் துணைப் பிரதமர் ஹி லிஃபெங் கலந்துகொள்வார் என சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அமெரிக்காவின் தரப்பில் நிதி அமைச்சர் ஸ்காட் பெசண்ட்டும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீரும் பங்கேற்கவுள்ளதாக அவர்களின் அலுவலகங்கள் தெரிவித்தன.
அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனப் பொருள்கள்மீது 145% வரை புதிய வரிகளை விதித்துள்ளார். சீனாவும் அதன் பங்கிற்கு அமெரிக்க இறக்குமதிகள்மீது 125% வரிகளை விதித்துள்ளது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை சில மாதங்களுக்கு தொடரும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக வர்த்தக நிபுணர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.
ஜனவரியில் அதிபர் டிரம்ப்பின் பொறுப்பேற்பு நிகழ்வில் சீனத் துணை அதிபர் ஹான் ஸெங் கலந்துகொண்டதற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான முதல் உயர்மட்ட சந்திப்பாக இது அமையும்.
அமெரிக்காவின் நலனைக் காக்க அனைத்துலகப் பொருளியல் முறைக்கு மீண்டும் சமநிலை காண்பதை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக திரு பெசண்ட் கூறினார்.
ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “இப்பேச்சுவார்த்தை, பதற்றத்தைக் குறைப்பது பற்றியதாக இருக்கும், பெரிய வர்த்தக உடன்பாடு பற்றியதாக அல்ல. நாங்கள் உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்குமுன் பதற்றத்தைக் குறைக்க வேண்டும்,” என்றார்.