போதைப் பொருள் ஒழிப்பு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்கா – சீனா உயர்மட்டப் பேச்சுவார்த்தை
அமெரிக்காவும் சீனாவும் போதைப்பொருள் எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து வியாழக்கிழமை உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன. இருதரப்பு ஒத்துழைப்புகளில் இந்த வாரம் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளும் போதைப்பொருள் தொடர்புடைய பேரளவிலான பண மோசடியை முறியடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவும் சீனாவும் போதைப்பொருள் ஒழிப்பு, சட்ட அமலாக்கத் துறைகளில் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கின. மேலும் சீனாவின் பொதுப் பாதுகாப்புத் துறை இந்த வழக்கை இரண்டு வல்லரசுகளுக்கும் இடையிலான போதைப்பொருள் எதிர்ப்பு ஒத்துழைப்பின் வெற்றிகரமான எடுத்துக்காட்டு என்று பாராட்டியது.
போதைப்பொருள் கடத்தல் வருமானத்தில் பெற்ற 50 மில்லியன்அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை மாற்றுவதில் கலிஃபோர்னியாவில் இயங்கும் மெக்சிக்கோவின் சினலோவா கார்டெல் சார்ந்த குழுக்களுடன் இணைந்து சீனாவின் சட்டவிரோத வங்கி செயல்படுவதாக அமெரிக்க நீதித்துறை இந்த வாரம் குற்றம்சாட்டியது.
மெக்சிக்கோ, சீனா ஆகிய நாடுகளில் சட்ட அமலாக்கத் துறைகளுடன் அணுக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டதாக அமெரிக்க நீதித் துறை தெரிவித்தது. இந்த வழக்கில் சந்தேகத்துக்குரிய நபரை சீனா கைது செய்ததாகக் கூறிய சீன அரசு ஊடகம், அந்த நபர் அந்நியச் செலாவணி சட்டவிரோத வர்த்தகம் உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறியது.
அமெரிக்காவில் மரணத்துக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருக்கும் ஃபென்டான்யில் துஷ்பிரயோகம் இருப்பதைத் தொடர்ந்து, சட்டவிரோத நிதி வசதிச் சேவை மற்றும் ஃபென்டான்யில் தயாரிக்க பயன்படுத்தக்கூடிய ரசாயனங்கள் மீதான கூடுதல் கட்டுப்பாடுகள் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை தேசிய மருந்து கட்டுப்பாட்டுக் கொள்கை அலுவலகத்தின் இயக்குநர் ராகுல் குப்தா, வியாழக்கிழமை உயர்மட்ட சீன அதிகாரிகளைச் சந்தித்து ஒத்துழைப்பு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்தது.
கொவிட்-19 கிருமியின் தோற்றம், வர்த்தக வரிகள், தைவான் விவகாரம், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அண்மைய ஆண்டுகளில் பதற்ற நிலையை அடைந்துள்ளது. இதனால் ஃபென்டான்யில் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடுக்கும் முயற்சிகளில் மீண்டும் இணைய சீனாவைத் தூண்டுவது அமெரிக்காவுக்கு இடையூறாக உள்ளது.