தைவானுக்கு 2 பில்லியன் டொலர் ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் ;பதிலடி வழங்க சீனா உறுதி
அமெரிக்கா, தைவானுக்கு இரண்டு பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்றதற்கு பதிலடி கொடுக்க சீனா உறுதிபூண்டுள்ளது.
அமெரிக்கா, தைவான் இரண்டுக்கும் இடையே அதிகாரபூர்வ அரசதந்திர உறவு கிடையாது. இருந்தாலும் சட்டப்படி தைவான் தன்னைத் தற்காத்துக்கொள்ள அமெரிக்கா அதற்குத் தேவையான உதவி வழங்க வேண்டும்.அதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளால் பெய்ஜிங் சினமடைந்துள்ளது.
இரண்டு பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியிருப்பதாக அந்நாட்டுத் பாதுகாப்பு அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) அறிவித்தது. அதன்கீழ் உக்ரேன் போரில் பயன்படுத்தப்பட்ட நவீன பாதுகாப்பு முறையும் தைவானுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்நடவடிக்கையை சீனா வன்மையாகக் கண்டிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு சனிக்கிழமையன்று (அக்டோபர் 26) கூறியது. தனது சுய ஆளுமை உரிமையைத் தற்காக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அந்நாடு அறிவித்தது.
தைவானுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் தைவான் நீரிணையில் அமைதி, நிலைத்தன்மையை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு சீனா, அமெரிக்காவுக்குக் கூறி வந்துள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.