நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ஐ.நா சபை – 193 நாடுகளுக்கும் எச்சரிக்கை!
ஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
பல உறுப்பு நாடுகள் தங்கள் கட்டாய பங்களிப்புகளை செலுத்தத் தவறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி நெருக்கடி ஆழமடைந்து வருவதாகவும், ஐ.நா. திட்டங்களை செயல்படுத்துவதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய நிலைமை தொடர்ந்தால், அடுத்த ஜூலை மாதத்திற்குள் அமைப்பில் உள்ள பணம் தீர்ந்துபோகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் 193 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், சம்பந்தப்பட்ட நாடுகள் உடனடியாக தங்கள் கட்டாய பங்களிப்புகளை செலுத்த வேண்டும்.
அல்லது ஐ.நா.வின் நிதி விதிகள் மற்றும் நடைமுறைகளை திருத்த ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இல்லையெனில், ஐ.நா.வின் முழு செயல்பாடும் சரிந்துவிடும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.




