போர்க்கள பின்னடைவுகளால் ஒட்டாவா ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ள உக்ரேன்

அமெரிக்காவிடமிருந்து புதிய பீரங்கிகள், வெடிமருந்துகள் பெறுவதிலும் முன்களத்தில் நிற்பதற்குப் போதுமான புதிய வீரர்களைச் சேர்ப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ள உக்ரேன், ஒட்டாவா ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஜூன் 29ஆம் தேதி அறிவித்தது.
இம்முடிவு, உக்ரேனில் ரஷ்யாவின் முன்னேற்றத்தைத் தடுக்க உதவும் என்று ராணுவ ஆய்வாளர்களும் உக்ரேனிய படைப்பிரிவு தளபதி ஒருவரும் தெரிவித்தனர். ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை நடத்தி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் ரஷ்யாவைத் தடுத்துநிறுத்த உக்ரேன் போராடி வருகிறது.
ரஷ்யா, இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பன்று. மேலும், ரஷ்யா கண்ணிவெடிகளைப் பரவலாகப் பயன்படுத்தி வருவதாக ராணுவ ஆய்வாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் உக்ரேனிய வீரர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கக் கோரியதற்கு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு பதிலளிக்கவில்லை. உக்ரேனில் கண்ணிவெடிகள் பயன்படுத்துவதை ரஷ்யா உறுதிப்படுத்தவில்லை. உக்ரேன் ஏற்கெனவே போரில் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தியுள்ளது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்கா கடந்த நவம்பரில் உக்ரேனுக்குக் கண்ணிவெடிகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக ராய்ட்டர்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
அப்போது, உக்ரேன் தனது சொந்தப் பிரதேசத்தில் அமெரிக்க கண்ணிவெடிகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவற்றைப் பயன்படுத்த மாட்டோம் என்று அது உறுதியளித்தது. 2014ல் கைப்பற்றிய கிரைமியா உடப்ட உக்ரேனின் ஐந்தில் ஒரு பகுதி ரஷ்யாவசம் உள்ளது. ரஷ்யா 2014ல் கிரைமியாவைக் கைப்பற்றியது.