உக்ரைன் போர் தீர்வு விரைவில் – அமைதிக்கான சபை குறித்து ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு
உக்ரைன் போர் தொடர்பில் மிக விரைவில் தீர்வு கிடைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற தனது “அமைதிக்கான சபை” தொடர்பான கையெழுத்து நிகழ்வில், ட்ரம்ப் பல உலகத் தலைவர்களுடன் இணைந்து கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ட்ரம்ப்,
” ஒரு வருடம் முன்பு உலகம் தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்தது, ஆனால் பலருக்கு அது தெரியாது” என கூறினார்.
இதுவரை எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்.” என்றார்.
இந்த நிகழ்வில் அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே, ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கசிந்த ஒரு ஆவணத்தின் படி, இந்த “அமைதிக்கான சபை” ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் ட்ரம்ப், இந்த சபை ஐ.நா.வுடன் இணைந்து செயல்படும் என்றும், அதற்கு “மிகப்பெரிய சாத்தியக்கூறுகள்” இருப்பதாகவும் விளக்கினார்.
இதற்கு முன், கிரீன்லாந்து தொடர்பாக எதிர்கால ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.
மேலும், அவரை எதிர்க்கும் நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த புதிய வரிகளை கைவிடுவதாகவும் அறிவித்தார்.
ஆனால் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், டிரம்புடனான சந்திப்பில் கிரீன்லாந்து மீதான டென்மார்க்கின் இறையாண்மை குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.
டென்மார்க்கின் பிரதமர் மெட்டே ஃபிரெடெரிக்சன், “பாதுகாப்பு, முதலீடு, பொருளாதாரம் குறித்து பேசலாம். ஆனால் நமது இறையாண்மை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது” என்று உறுதியாக கூறினார்.





