ரஷ்யாவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய இந்தியாவிற்கு உக்ரைன் வலியுறுத்தல்
ரஷ்யா உடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உக்ரைனை ஆதரிக்க வேண்டும் எனவும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா பாரம்பரியமாக ரஷ்யாவுடன் நெருங்கிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. கடந்த 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவை விமர்சிப்பதை இந்தியா தவிர்த்தது. மேலும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தபோதும், இந்தியா ராஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை குறைக்காமல் அதிகரித்தது.
ரஷ்யா உடனான போரை எதிர்கொள்ள உக்ரைன், நோட்டோ உறுப்பு நாடுகள் மட்டுமின்றி, பிற நாடுகளின் ஆதரவையும் பெற முயற்சித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவர் டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இன்று சந்தித்துப் பேசினார்.
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த உதவிகளை பெறுவதற்கும், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் டிமிட்ரோ குலெபா இந்தியாவுக்கு வந்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு டிமிட்ரோ குலெபா கூறுகையில், “இந்தியா உற்பத்தி செய்யும் கனரக இயந்திரப் பொருட்களை இறக்குமதி செய்வதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பெரும்பாலும் சோவியத் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இது பல நூற்றாண்டுகளாக பராமரிக்கப்படும் மரபு அல்ல. அது காலாவதியாகிக் கொண்டிருக்கும் ஒரு மரபு. இந்தியா உக்ரைனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.” என்றார்.
இதேபோல், மற்றொரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிமிட்ரோ குலெபா, ”இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு, உக்ரைன் எதிரான நாடு அல்ல” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.