ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு போக்குவரத்தை நிறுத்திய உக்ரைன்
உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கு ரஷ்ய இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக ஐரோப்பாவிற்கு சோவியத் யூனியன் கால குழாய்கள்வழி எரிவாயு அனுப்பப்பட்டு வந்தது.இந்நிலையில், அதற்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதால் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே கடுமையான போர் நிலவுவதால் எரிவாயு ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
“உக்ரேன் வழியாக ரஷ்ய எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுவதை நிறுத்திவிட்டோம். இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ரஷ்யா அதன் எரிவாயுச் சந்தைகளை இழந்து வருகிறது. இதன் விளைவாக அதற்கு நிதி அடிப்படையில் பேரிழப்பு ஏற்படும். ரஷ்ய எரிவாயுவைப் பயன்படுத்தப்போவதில்லை என்று ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டன,” என்று உக்ரேனின் எரிசக்தித்துறை அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே போர் வெடித்தது.இதனால், உக்ரேன் மூலம் ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு அனுப்புவது நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை என்று உக்ரேன் முதலிலிருந்தே கூறி வந்தது.இந்நிலையில், கருங்கடலுக்கு அடியில் பொருத்தப்பட்ட ‘டர்க்ஸ்ட்ரீம்’ குழாய்கள் வாயிலாக ரஷ்யா தனது எரிவாயுவைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது.
‘டர்க்ஸ்ட்ரீம்’ குழாய்கள் இரு பாதைகளைக் கொண்டுள்ளன.அதில் ஒன்று துருக்கிக்குச் செல்கிறது.அதன்மூலம் அனுப்பிவைக்கப்படும் எரிவாயு துருக்கியின் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.மற்றொரு குழாய் வழியாகச் செல்லும் எரிவாயு ஹங்கேரி, செர்பியா உட்பட மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது.
ரஷ்யா-உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய எரிவாயுவைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரப்படுத்தியது.இதற்குமுன் உக்ரேன் வழியாக ரஷ்ய எரிவாயுவை பெற்றுக்கொண்ட ஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா போன்ற நாடுகள் வேறு நாடுகளிலிருந்து எரிவாயு வாங்க ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கிடையே, உக்ரேன் வழியாக ரஷ்ய எரிவாயு இனி கிடைக்காது என்ற காரணத்தினால் வீடுகளுக்கு வெந்நீர், வெப்பமூட்டும் சாதனங்கள் விநியோகிப்பதை மால்டோவாவிலிருந்து பிரிந்து சென்றுள்ள டிரான்ஸ்ட்னீஸ் நிறுத்தியுள்ளது.