பிரித்தானியாவில் வீடுகளின் விலை மீண்டும் உயர்வு -வீடு வாங்குவோருக்கு 2026 சாதகமான ஆண்டு?
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு இறுதியில் எதிர்பாராத சரிவைச் சந்தித்த வீட்டு விலைகள், ஜனவரி மாதத்தில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னணி அடமானக் கடன் நிறுவனமான நேஷன்வைட் (Nationwide) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரியில் சராசரி வீட்டு விலை பூஜ்ஜியம் தசம் மூன்று சதவீதம் (0.3%) உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஒரு சராசரி வீட்டின் விலை இரண்டு இலட்சத்து 70 ஆயிரத்து 873 ( £270,873) பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.
வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கியுள்ளதால், 2026 ஆம் ஆண்டு வீட்டுச் சந்தையில் இரண்டு முதல் நான்கு சதவீதம் (2%-4%) வரை வளர்ச்சி இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடந்த டிசம்பரில் வட்டி விகிதம் 3.75 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இங்கிலாந்து வங்கியின் (Bank of England) கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் பணவீக்கம் கட்டுக்குள் வரும் பட்சத்தில், கடன் வட்டி விகிதங்கள் மேலும் குறைய வாய்ப்புள்ளதால், புதிய வீடு வாங்குவோருக்கு இது சாதகமான ஆண்டாக அமையும் என நேஷன்வைட் தலைமை பொருளாதார நிபுணர் ராபர்ட் கார்ட்னர் தெரிவித்துள்ளார்.





