உபெர்க்கு அபராதம்: பயணிக்கு ரூ. 71 கோடி (LKR 240 கோடி) இழப்பீடு!
அமெரிக்காவின் அரிசோனா மாநில நீதிமன்றம், உபெர் (Uber) நிறுவனம் தனது பயணி ஒருவருக்கு $8.5 மில்லியன் (சுமார் ₹71 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அரிசோனாவில் விமானப் பணிப்பெண் (Flight Attendant) பயிற்சிக்கான பட்டமளிப்பு விழாவை முடித்துவிட்டு, ஜெயிலின் டீன் (Jaylynn Dean) என்ற 19 வயது இளம்பெண் தனது விடுதிக்குச் செல்ல உபெர் கார் முன்பதிவு செய்துள்ளார்.
பயணத்தின் இடையே, ஓட்டுநர் ஹசன் துரே (Hassan Turay) காரை ஒரு இருட்டான இடத்தில் நிறுத்தி, பின் இருக்கைக்கு வந்து ஜெயிலினை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ஜெயிலின் போதையில் இருந்ததால் தற்காத்துக் கொள்ளும் நிலையில் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உபெர் நிறுவனம் பொதுவாக ஓட்டுநர்களை “சுயாதீன ஒப்பந்ததாரர்கள்” (Independent Contractors) என்று கூறி, அவர்களின் குற்றங்களுக்கு நிறுவனம் பொறுப்பல்ல என்று வாதிட்டது.
ஆனால், இந்த வழக்கில் நடுவர் மன்றம் (Jury), ஓட்டுநர் உபெர் நிறுவனத்தின் ஒரு “முகவராக” (Agent) செயல்பட்டார் என்பதை உறுதி செய்தது. எனவே, ஓட்டுநரின் செயலுக்கு உபெர் நிறுவனமே சட்டப்படி பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதற்காக ஜெயிலினுக்கு $8.5 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் உபெர் நிறுவனத்திற்குப் பாடம் புகட்டும் வகையில் $144 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அபராதமாக (Punitive Damages) விதிக்க வேண்டும் என்று ஜெயிலின் தரப்பு கோரியிருந்தது. ஆனால், நடுவர் மன்றம் அதை ஏற்கவில்லை. உபெர் நிறுவனத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் “மிகவும் மோசமானவை” என்று கருத முடியாது என்பதால், பாதிப்பிற்கான இழப்பீட்டை ($8.5M) மட்டும் வழங்க உத்தரவிட்டது.
ஜெயிலின் டீனின் வழக்கறிஞர் கூறுகையில், “இந்தத் தீர்ப்பு, பெரும் தனிப்பட்ட இடர்பாடுகளுக்கு மத்தியிலும் துணிச்சலாகப் புகார் அளிக்க முன்வந்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் உபெர் நிறுவனம் மீது அமெரிக்கா முழுவதும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை புகார்கள் நிலுவையில் உள்ளன. இந்தத் தீர்ப்பு அந்த மற்ற வழக்குகளுக்கும் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதையில் இருக்கும் பெண் பயணிகள் தனியாகச் செல்லும் போது, அவர்களைப் பாதுகாக்க உபெர் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக உபெர் அறிவித்துள்ளது. தங்களது பாதுகாப்பு அமைப்புகள் சரியாக இருப்பதாகவும், ஓட்டுநரின் பின்னணி சோதனையில் எந்தக் குற்றப்பதிவும் இல்லை என்றும் உபெர் வாதிடுகிறது.
ஜெயிலின் டீனின் கூறுகையில் “இனி எந்தப் பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே நான் பகிரங்கமாக இந்தப் போராட்டத்தை நடத்தினேன். உபெர் நிறுவனம் பாதுகாப்பை விட லாபத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.





