வடக்கு தாய்லாந்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இரண்டு யானைகள் உயிரிழப்பு
வடதாய்லாந்தின் பிரபல சியாங் மாய் சுற்றுலாத்தலத்தில் உள்ள யானைக் காப்பகத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த இரண்டு யானைகள் உயிரிழந்துவிட்டன.
அவற்றில் ஒரு யானையின் 16 வயது. 40 வயதுடைய மற்றொரு யானை ஏற்கெனவே பார்வை இழந்துவிட்டதாக யானை இயற்கைவனப் பூங்கா என்னும் அந்தக் காப்பகத்தின் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) தெரிவித்தது.
அந்த இரு யானைகளும் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டன.
வெள்ளத்தின் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே சென்றதால் சியாங் மாய் மாநிலத்தின் யானை இயற்கைவனப் பூங்காவில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஏற்கெனவே உயரமான இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதாக அதன் ஊழியர் ஒருவர் கூறினார்.
“வெள்ளநீரில் யானைகள் மிதந்துசென்றதைக் கண்டு அதிர்ந்தேன். இதுபோல இனியும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பூங்காவின் இயக்குநரான பெண்மணி ஒருவர் தெரிவித்தார்.
வெள்ள அபாயம் காரணமாக, ஹோட்டல்களில் தங்கி இருந்த சுற்றுப்பயணிகளை உள்ளூர் அதிகாரிகள் வெளியேற்றினர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.