கனடாவுக்கு அனுப்புவதாக கூறி இலங்கையர்களை ஏமாற்றிய இருவர் டெல்லியில் கைது
இந்தியா ஊடாக சட்டவிரோதமான முறையில் 10 இலங்கை பிரஜைகளை கனடாவுக்கு அனுப்பி ஏமாற்றிய இரண்டு முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த மகேந்திரராஜா (63), தமிழகத்தைச் சேர்ந்த செல்வகுலேந்திரன் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
காவல் துறை அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மஹிபால்பூர் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு 10 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நிற்பதைக் கண்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
அடையாளச் சான்று கேட்டபோது அவர்களால் அதைச் சமர்ப்பிக்க முடியவில்லை. பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இவர்கள் அனைவரும் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒருவரான மகேந்திரராஜா, செல்வகுலேந்திராவின் இயக்கத்தின் கீழ் மற்றவர்களை வழிநடத்தும் துணை முகவராக இருந்தார்.
அவர்கள் அனைவரும் கனடாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
பின்னர், தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள செல்வகுலேந்திரனின் இருப்பிடத்தை சுற்றிவளைத்ததாக துணை பொலிஸ் ஆணையர் (விமான நிலையம்) தேவேஷ் குமார் மஹ்லா தெரிவித்தார்.
விசாரணையில், டெல்லி வழியாக கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதற்காக தலா இரண்டு லட்சம் ரூபாய் பெற்றதாக செல்வகுலேந்திரன் தெரிவித்தார்.
இலங்கையில் அவர் சந்தித்த விஜய் என்ற நபரே இந்த இலங்கையர்களை அவரிடம் அனுப்பியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மகேந்திரராஜாவுக்கு சொந்தமான இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு பயணிகளின் பெயரில் இரண்டு கனேடிய விசாக்கள், இரண்டு இந்திய கடவுச்சீட்டுகள் மற்றும் செல்வகுலேந்திரனிடமிருந்து இரண்டு இலங்கை கடவுச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.