டஸ்கர் அக்போ யானை மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களிலிருந்து முன்னர் மீண்டு வந்த போதிலும், அக்போ எனப்படும் யானை மீண்டும் ஒருமுறை சுடப்பட்டு காயமடைந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திரிப்பனை வண்ணமடுவ குளத்திற்கு அருகில் அடையாளந்தெரியாத ஒருவரால் குறித்த மிருகம் சுடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜே.சி. சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
கால்நடை மருத்துவ நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
இலங்கையில் காடுகளில் எஞ்சியிருக்கும் சில ராட்சத யானைகளில் ஒன்றாக அக்போ உள்ளது. ஏறக்குறைய 40 வயது மற்றும் சுமார் 10 அடி உயரத்தில் நிற்கும் குறித்த யானை காட்டுப்பகுதியில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு ட்ராப் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அக்போவின் முந்தைய மோசமான நிலைக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.