ட்ரம்பின் சர்ச்சைக்குரிய திட்டம் : சுற்றுலா பயணிகளிடம் 05 வருட சமூக ஊடக அறிக்கை கோரப்படலாம்!
பிரித்தானிய உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முற்படும் சுற்றுலா பயணிகள் தாம் பயன்படுத்திய 05 வருட சமூக ஊடக தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விசா இல்லாமல் 90 நாட்களுக்கு அமெரிக்காவிற்குச் செல்ல தகுதியுள்ள டஜன் கணக்கான நாடுகளைச் சேர்ந்த மக்களை இந்த புதிய விதி பாதிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் எல்லைகளை பாதுகாக்கவும், புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை கையில் எடுத்துள்ளார்.
இதற்கமைய அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் மக்களின் சமூக ஊடக தளத்தின் பயன்பாட்டை கோரும் நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த புதிய திட்டம் சாத்தியமான பார்வையாளர்களுக்கு ஒரு தடையாக இருக்கலாம் அல்லது அவர்களின் டிஜிட்டல் உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய சரிவை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், “மக்கள் இங்கு வந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். “தவறான நபர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.





