பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய நெருக்கடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகப் புதிய பொருளாதாரப் போரை அறிவித்துள்ளார்.
காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் தனது ‘அமைதிச் சபையில்’ (Board of Peace) இணைய மறுத்ததற்காக, பிரெஞ்சு மதுபானங்கள் மற்றும் ஷாம்பெயின் (wines and champagne) மீது 200 சதவீத வரி விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் விரைவில் பதவியில் இருந்து விலகப்போகிறார் என விமர்சித்த ட்ரம்ப், இந்த வரி விதிப்பின் மூலம் அவரைப் பணிய வைக்க முடியும் எனத் தெரிவித்தார்.
அதேநேரம், கிரீன்லாந்தை அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தனது திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது பிப்ரவரி 1 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
“கிரீன்லாந்து உலகப் பாதுகாப்பிற்குத் தேவையானது, ஐரோப்பியர்களால் அதைப் பாதுகாக்க முடியாது” எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், தேவைப்பட்டால் இராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப் போவதில்லை எனச் சமிக்ஞை செய்துள்ளார்.
ட்ரம்பின் இந்த நகர்வுகள் அமெரிக்க-ஐரோப்பிய உறவில் முன்னெப்போதும் இல்லாத விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் வரும் வியாழக்கிழமை அவசர உச்சி மாநாட்டைக் கூட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





