25 வீதம் வரி விதிக்க தயாராகும் டரம்ப் ; கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள EU

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்குக் கூடிய விரைவில் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தடையற்ற, நியாயமான வர்த்தகத்துக்கு எதிராக அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பு இருப்பதாக அது சாடியது.அந்த வரிவிதிப்பு நியாயமற்றது என்றும் தடையற்ற, நியாயமான வர்த்தகத்துக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் அது கூறியது.
இதற்கு உடனடியாக, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை (பிப்ரவரி 26) சூளுரைத்தது.
“நியாயமற்ற வரிவிதிப்புகளிடமிருந்து ஐரோப்பிய வர்த்தகங்கள், ஊழியர்கள், பயனீட்டாளர்கள் ஆகியோரை ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் பாதுகாக்கும்,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் உட்பட மற்ற பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவுக்குப் பாதிப்பை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அமைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியம், “ஐரோப்பிய ஒன்றியம், உலகிலேயே ஆகப் பெரிய தடையற்ற வர்த்தகச் சந்தையாகும். அமெரிக்காவுக்கு அது ஒரு வரமாக இருந்து வந்துள்ளது. பெரிய, ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை சந்தையை உருவாக்கியதன் மூலம், அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் செலவுகளைக் குறைக்கவும் 27 நாடுகளுக்கிடையே வர்த்தகங்களுக்கான தரநிலையை ஒழுங்குபடுத்தவும் வர்த்தகங்களை வழிநடத்தவும் ஐரோப்பிய ஒன்றியம் உதவியுள்ளது.
“இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க முதலீடுகள் பேரளவில் லாபம் ஈட்டுகின்றன. கலந்துரையாடல், வெளிப்படைத்தன்மை, பரஸ்பர வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முக்கியத்துவம் கொடுக்கிறது. விதிமுறைகளுக்கு உட்படுவோருடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். அதே சமயம் ஐரோப்பியப் பயனீட்டாளர்களும் வர்த்தகர்களும் பாதுகாக்கப்படுவர்,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.