அணு ஆயுத சோதனைக்கு ட்ரம்ப் அதிரடி உத்தரவு – உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு
 
																																		அணு ஆயுத சோதனையை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளமை உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திப்பதற்குச் சற்று முன்பு, அமெரிக்க ஜனாதிபதி சமூக ஊடகங்களில் அணு ஆயுத சோதனையை உடனடியாகத் தொடங்க உத்தரவிட்டதாகப் பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா இரண்டு அணு ஆயுதங்களைச் சோதித்திருந்த நிலையில் ட்ரம்பின் உத்தரவு வெளியாகி உள்ளது.
சமூக ஊடகப் பதிவில், மற்ற நாடுகள் ஆயுத சோதனைத் திட்டங்களை நடத்தி வருவதால், இதே அடிப்படையில் அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளுமாறு போர்த் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், சோதனைகள் இன்று தொடங்கும் எனவும் ட்ரம்ப் கூறினார்.
முதல் முறையாக ‘பொசைடன்’ (Poseidon) ட்ரோன் அணுசக்தியுடன் இயக்கப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்திருந்தார். ஆனால், சோதனைகளின் இருப்பிடம் அல்லது பிற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
வேகம் மற்றும் செயல்பாட்டு ஆழத்தைப் பொறுத்தவரை, இந்த ட்ரோனைப் போன்ற எதுவும் உலகில் எங்கும் இல்லை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற எதுவும் உருவாக்கப்பட வாய்ப்பில்லை என்றும் புடின் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், மூன்று நாட்களுக்கு முன்பு, ‘புரெவெஸ்ட்னிக்’ எனப்படும் புதிய அணுசக்தியால் இயங்கும் குரூஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையையும் புடின் அறிவித்தார்.
இவ்வாறான நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இன்று வெளியிடப்பட்ட ஒரு சமூக ஊடகப் பதிவில், அமெரிக்கா வேறு எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
        



 
                         
                            
