டல்லாஸில் இந்தியர் கொலையை அடுத்து, அமெரிக்க குடியேற்றக் கொள்கையை குற்றம் சாட்டியுள்ள டிரம்ப்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாகமல்லையா(50). கடந்த 10ம் திகதி யோர்டானிஸ் கோபோஸ் மார்டினெஸ்(37) என்ற நபரால் நாகமல்லையா தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாகமல்லையாவை கொலை செய்த கோபோஸ் மார்டினெஸ், கியூபா நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே கோபோஸ் மார்டினெஸ் ஒருமுறை கைது செய்யப்பட்டதாகவும், அவரது நாடுகடத்தலை கியூபா ஏற்க மறுத்ததால் கடந்த ஜனவரி மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட குடியேற்றக் கொள்கைகளை, தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“டல்லாஸ் நகரில் மிகவும் மரியாதையுடன் வாழ்ந்து வந்த நாகமல்லையா என்பவர், அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தவர் கியூபாவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர். அந்த நபர் அமெரிக்காவில் இருந்திருக்கவே கூடாது.
கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நபர் ஏற்கனவே திருட்டு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரமான குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு, அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் இதுபோன்ற ஒரு மோசமான குற்றவாளியை ஏற்க கியூபா மறுத்து விட்டது.
எனவே, திறமையற்ற முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் மோசமான குடியேற்றக் கொள்கையால் அந்த நபர் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறிய குடியேறிய குற்றவாளிகளிடம் மென்மையாக நடந்து கொள்ளும் வழக்கம் இனி முடிவுக்கு வரும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.