ஆசியச் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த ட்ரம்ப் – கோலாலம்பூரில் அன்வர் இப்ராஹிம் வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இன்று தனது ஆசிய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அதற்கமைய, முதல் கட்டமாக மலேசியா சென்றடைந்துள்ளார். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) அமெரிக்க ஜனாதிபதியை அன்புடன் வரவேற்றார்.
அமெரிக்க ஜனாதிபதி மலேசியாவில் தங்கியிருக்கும் போது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) உச்சிமாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
ட்ரம்ப் மலேசியா வருவதற்கான முக்கிய மையங்களில் ஒன்றாக, கடந்த ஜூலை மாதம் எல்லை மோதல்களைத் தொடர்ந்து தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் உள்ளதென தெரியவந்துள்ளது.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் கடந்த ஜூலை மாதம் கொடிய எல்லைச் சண்டையாக வெடித்தன. மோதல்கள் ஐந்து நாட்கள் நீடித்ததில், 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
ஜூலை மாதம் 28ஆம் திகதியன்று, கோலாலம்பூரில் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
தாய்லாந்து ஆரம்பத்தில் போர் நிறுத்தத்தை நிராகரித்தது. ஆனால், சண்டை நிறுத்தப்படும் வரை வரி பேச்சுவார்த்தைகள் தொடராது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து, தாய் அதிகாரிகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
இது குறித்து தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையில் பெருமையுடன் மத்தியஸ்தம் செய்த மாபெரும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.





