இந்தியாவில் சரக்குலொரி- பேரூந்தும் மோதி விபத்து ; கன்வார் யாத்திரிகர்கள் உட்பட 18 பேர் பலி

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேருந்தும் சரக்கு லொரியும் மோதிக்கொண்டதில் கன்வார் யாத்திரிகர்கள் உட்பட 18 பேர் பலியாயினர். பலர் காயமுற்றனர். பேருந்தில் 35 பேர் இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜமுனியா வனப்பகுதி அருகில் கன்வார் பக்தர்கள் சென்ற பேருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) அதிகாலை சுமார் 4.30 மணிக்குச் சமையல் எரிவாயுக்கலன்கள் இருந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துப் பற்றித் தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் அங்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாய் இருப்பதாகக் கூறப்பட்டது. உயிரிழந்தோரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.
விபத்து நேர்ந்த தியோகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் டூபே, பக்தர்கள் பலியானதை உறுதிப்படுத்தினார்.