சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபரீதம் – தாமதமான விமானம்
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இருக்கும் X-ray இயந்திரம் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பாலிக்குச் (Bali) செல்லவிருந்த Scoot விமானம் தாமதமானது.
காலை சுமார் 6.40 மணியளவில் முனையம் ஒன்றில் இருக்கும் D46 நுழைவாயிலில் உள்ள அறையில் X-ray இயந்திரத்திலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது.
Scoot TR280 விமானத்தின் பயணிகள் உடனடியாக D49 நுழைவாயிலில் இருக்கும் அறைக்கு மாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டதாக Scoot தெரிவித்தது.
காலை 7.10 மணிக்கு புறப்படவேண்டிய விமானம் 9 மணிக்குப் புறப்பட்டது. 11.30 மணிக்கு அது பாலியில் தரையிறங்கியது. TikTok தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் தீப்பிடித்த X-ray இயந்திரத்திலிருந்து புகை வெளியேறும் காட்சி தெரிகிறது. தீயணைப்புக் கருவியால் தீ அணைக்கப்படும் காட்சியையும் பார்க்கமுடிகிறது.
புகை சூழ்ந்த இடத்தில் பயணிகள் முகங்களை மூடியபடி நுழைவாயிலில் நடந்துகொண்டிருந்தனர்.
மின்சாரக் கோளாறு காரணமாக தீ மூண்டதாக சாங்கி விமான நிலையக் குழுமத்தின் பேச்சாளர் கூறினார்.