இன்றிரவு முதல் பூமியைச் சுற்றிவரவுள்ள இரண்டாவது நிலா
பூமி இன்றிரவு (செப்டம்பர் 29) புதிய, தற்காலிக ‘குட்டி நிலா’வைப் பெறவிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.‘2024 PT5’ என்பது அதன் பெயர்.
நிலாவின் விட்டம் 3,476 கிலோமீட்டர் எனும்போது இந்தக் குட்டி நிலாவின் விட்டம் ஏறக்குறைய 10 மீட்டர் மட்டுமே.
நிலாவைவிட 350,000 மடங்கு சிறிது என்பதால் இது கண்களுக்குப் புலப்படாது. சிறப்புத் தொலைநோக்கி மூலம்தான் காணமுடியும்.இயற்கையான முறையில் கோள்களைச் சுற்றிவரும் எந்தவொரு பொருளும் அக்கோளின் நிலா என்று அழைக்கப்படுவது வழக்கம்.
சனிக் கோளுக்கு இத்தகைய 146 நிலாக்கள் உள்ளன. வியாழனுக்கு 95 நிலாக்கள். செவ்வாய்க்கு இரண்டு. பூமிக்கு ஒன்றுதான்.
‘2024 PT5’ உண்மையில் விண்கல் வகையைச் சேர்ந்தது. இதை ஆகஸ்ட் 7ஆம் திகதி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
‘அர்ஜுனா’ எனும் விண்கல் வகையைச் சேர்ந்தது இது. இவ்வகை விண்கல்லுக்கு மகாபாரதத்தால் ஈர்க்கப்பட்ட விஞ்ஞானி மெக்நாட் இப்பெயரைச் சூட்டினார்.
அர்ஜுனனின் அம்பைப்போல் இவை விரைவாகச் சூரியக் குடும்பத்தைக் கடந்து சென்றுவிடும். கணிக்கமுடியாத இயல்பும் இவற்றுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்கு முன்பு 1997, 2013, 2018ஆம் ஆண்டுகளில் குட்டி நிலாக்கள் பூமியைச் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ‘2024 PT5’ குட்டி நிலா, நவம்பர் 25ஆம் திகதி மறைந்துவிடும்.