அதிர்ச்சியில் உயிரிழந்த புறா: டோக்கியோ டாக்ஸி டிரைவர் கைது- அப்படி என்ன செய்தார்?
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தனது காரை பயன்படுத்தி புறாவை கொல்ல முயன்றதாக கூறப்படும் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்சுஷி ஓசாவா என்ற 50 வயது கார் ஓட்டுனர், தனது காரில் புறாக் கூட்டத்தை துரத்த முயன்றார். இதில் புறா ஒன்று அதிர்ச்சியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வன உயிரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர், சாலைகள் மக்களுக்கானவை. கார் வருவதைக் கவனிக்க வேண்டியது புறாக்கள்தான் எனத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் குறைந்த எண்ணிக்கையிலான வேட்டைப் புறாக்களைக் கொல்ல அனுமதிக்கப்படுகிறது. மக்களின் விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பட்சத்தில் உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் புறாக்களைக் கொல்லலாம். ஆனால் அங்கு சாதாரண புறாக்களை கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அட்சுஷி என்ற டாக்சி டிரைவர், சாலையில் உள்ள புறாக்களை அடிக்கும் நோக்கில், சாலை விளக்குகள் பச்சை நிறமாக மாறியவுடன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை பாதசாரி ஒருவர் நேரில் பார்த்துள்ளார். தொழில் சாரதியான இவரின் இந்தச் செயலானது தீய நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.