பெங்களூரில் மூன்று இலங்கையர்கள் கைது: விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு?
இந்தியாவின் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த மூன்று இலங்கையர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சச்சின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலைக் குற்றவாளியுடன் சேர்ந்து மூவரும் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் இலங்கையில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராகவும் கொலை முயற்சி மற்றும் தாக்குதல்களை திட்டமிட்ட குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேகநபர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 13 கையடக்கத் தொலைபேசிகள், விசிட்டிங் கார்டுகள், பத்திரிகை விளம்பரங்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகள் என்பன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நால்வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தொடர்புகளை கொண்டிருந்த ஒருவரின் உதவியுடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மத்திய கிழக்கு நாடான ஓமன் நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் படகின் உதவியுடன் இந்தியா வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 20 நாட்களாக சென்னையில் இருந்து பெங்களூரு வந்ததாக கூறப்படுகிறது.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகளின் கண்காணிப்பில் சிக்காமல் அவர்கள் எப்படி நாட்டுக்குள் நுழைந்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் இந்திய குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.