இலங்கையில் அச்சுறுத்தும் பாதிப்பு – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் தட்டம்மை நோயினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. சுமார் 20 சிறுவர்கள் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 7 சிறுவர்கள் தற்போது சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குழந்தை சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றப்படாத பல குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் பரவும் நிலைமை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்படாத குழந்தைகளைக் கண்டறியும் விசேட வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கூடிய விரைவில் அந்த குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க பரிந்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.
9 ஆவது மாதத்திலும் 3 வயதிலும் குழந்தைகளுக்கு இரண்டு முறை தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்
ஆனால் மத நம்பிக்கைகளின் காரணமாக குறிப்பிட்ட சிலர் குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு சென்று, தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தட்டம்மை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.