ஆயிரக்கணக்கானோர் பலிகொண்ட பெருவெள்ளம்… லிபியாவில் மொத்த அதிகாரிகளும் கைது!
லிபியாவில் பெருவெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில், தற்போது நகர மேயர் உட்பட மொத்த அதிகாரிகளையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெர்னா நகரை வெள்ளத்தில் மூழ்கடித்த அணைகள் இடிந்து விழுந்ததில் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியம் குறித்த சந்தேகம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.லிபியாவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், புயலுக்கு பின்னர் டெர்னா நகரில் அணைகள் இடிந்து விழுந்தது தொடர்பாக எட்டு உள்ளூர் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு அணைகள் இடிந்ததை அடுத்து, திடீரென்று பெருவெள்ளம் நகருக்குள் புகுந்து மொத்த மக்களையும் கடலுக்குள் அடித்துச் சென்றது. இதனால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்திற்கு பின்னர் பொதுமக்கள் அதிகாரிகள் மீதே பழி சுமத்தினர். கடந்த 2007ல் அணைகளை சரிசெய்வதற்கான ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் உள்நாட்டுப் போருக்கு இடையே அந்த பணிகள் முடிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
2011ல் நேட்டோ ஆதரவு கிளர்ச்சி அப்போதைய ஜனாதிபதி முயம்மர் கடாபியை வீழ்த்தியது. அத்துடன் 2019 வரையில் ஐ.எஸ் பயங்கவாத அமைப்பு உட்பட பல்வேறு குழுக்களின் ஆதரவு பிரிவினரால் டெர்னா நகரம் கட்டுப்படுத்தப்பட்டது.தற்போது பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவை சந்தித்த டெர்னா நகர மக்கள், மேயரின் குடியிருப்பை தீக்கிரையாக்கினர், இந்த நிலையில், நாட்டின் கிழக்கில் உள்ள நிர்வாகம், நகர மேயர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், முழு நகர சபையும் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியது.
செப்டம்பர் 11ம் திகதி திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது மேலும் ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளனர், முழு கட்டிடங்களும் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.இதனிடையே, சர்வதேச மீட்புக் குழுக்கள் இடிபாடுகளுக்கு அடியில் மற்றும் நகரின் துறைமுகத்தில் இருந்தும் உடல்களை மீட்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து வருகின்றனர்.