இதுதான் கேப்டன்சியா.. தொடர்ந்து 4 டெஸ்ட் தோல்வி
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த கேப்டன் என்ற புதிய சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
இதன் மூலமாக முன்னாள் கேப்டன்களான சச்சின், தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரின் வரிசையில் ரோஹித் சர்மா இணைந்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
பெர்த் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் விளையாடிய இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்ற நிலையில், ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய அடுத்த போட்டியிலேயே வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது.
இதனால் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மட்டுமல்லாமல் கேப்டன்சி குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மீண்டும் டிஃபென்சிவ் பாணியிலான கேப்டன்சியை ரோஹித் சர்மா மேற்கொள்வதாலேயே இந்திய அணி தடுமாறுவதாகவும், பவுலர்களின் லைன் மற்றும் லெந்த் மிஸ்ஸாகும் போது, அவர்களுக்கு மாற்று திட்டங்களை கொடுப்பதிலும் சுணக்கம் காட்டுவதாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த 7வது கேப்டன் என்ற மோசமான சாதனையை செய்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்திருப்பதால், 4 தோல்விகளை சந்தித்துள்ளார்.
இதற்கு முன்பாக இந்த மோசமான சாதனையை தோனி, விராட் கோலி உள்ளிட்டோரும் செய்துள்ளனர்.
2011 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இரு முறை தோனி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறார்.
அதேபோல் விராட் கோலி 2020-21 ஆண்டில் தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார்.
அதேபோல் 1959ஆம் ஆண்டு டட்டா கெய்க்வாட் தொடர்ந்து 4 டெஸ்டில் தோல்வியை சந்தித்துள்ளார்.
அதேபோல் 1999-2000 ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து 5 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளார்.
இந்த பட்டியலில் உச்சமாக 1967-68ல் மன்சூர் அலி கான் படோடி தொடர்ந்து 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார்.