இந்தியாவில் திருட வந்த இடத்தில் வருத்தப்பட்டு காசு கொடுத்த திருடன்..!
உணவகம் ஒன்றுக்குள் கொள்ளையடிப்பதற்காகப் புகுந்த திருடன் ஒருவன், வெறுங்கையாகச் செல்லும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்த உணவகத்தின் சிசிடிவி கேமராவில் பதிவான இரண்டு நிமிடக் காணொளி எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
கையுறை, தொப்பி, முகத்தை மறைக்க ஒரு துணி என இந்தியாவின் மகேஸ்வரம் கிராமத்தில் அமைந்திருந்த ஹோட்டலுக்குள் திருடன் புகுந்தான்.விலையுயர்ந்த பொருள் ஏதேனும் சிக்குமா என அந்தத் திருடன் தேடித் தேடிப் பார்க்க, ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தான்.
அதையடுத்து சிசிடிவி கேமராவைப் பார்த்தபடி தனது வருத்தத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்தினான் திருடன்.
பொருள் ஏதும் சிக்காத நிலையில் திருடன் குளிர்சாதனப் பெட்டியை நோக்கிச் சென்றான்.அதிலிருந்து தண்ணீர்ப் புட்டி ஒன்றை எடுத்தவன், கேமராவை நோக்கி அதைக் காண்பித்தான்.அடுத்த நிமிடம் தனது பணப்பையிலிருந்து 20 ரூபாயை எடுத்து மேசை மீது வைத்தான்.
கையில் இருந்த தண்ணீர்ப் புட்டியையும் மேசை மீதிருந்த 20 ரூபாயையும் விரலால் காட்டியபடி வருத்தத்துடன் அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டான்.
இதற்கிடையே, அத்துமீறி நுழைந்த சம்பவம் ஜூலை 18ஆம் திகதி நடந்தும் ஒரு வாரம் கழித்துதான் அது தெரியவந்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குறிப்பிட்டது.
பின்னர், அதே நாளன்று காவல்துறைக்கும் புகார் அளிக்கப்பட்டது.திருடன் வயதானவராக இருக்கக்கூடும் என்று மகேஸ்வரம் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.இது தொடர்பான விசாரணை நடந்துவருகிறது.