“மாமன்னன்” படம் தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி, தொடர்ந்து சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக ஜொலித்து வந்தார்.
இதையடுத்து அரசியலில் எண்ட்ரி கொடுத்த உதயநிதி, தற்போது அமைச்சர் ஆனதால், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்தார்.
உதயநிதி கடைசியாக நடித்த திரைப்படம் மாமன்னன். அப்படத்தை கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது.
மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். உதயநிதி படத்துக்கு அவர் இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும்.
இப்படத்திலிருந்து இதுவரை ராசா கண்ணு மற்றும் ஜிகு ஜிகு ரயிலு ஆகிய இரு பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் ராசா கண்ணு பாடலை வடிவேலுவும், ஜிகு ஜிகு ரயிலு பாடலை ஏ.ஆர்.ரகுமானும் பாடி இருந்தார். இரண்டு பாடல்களுமே வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் இந்த விழா நடைபெற உள்ளது.
உதயநிதி நடித்துள்ள கடைசி படம் இது என்பதால், இதன் இசை வெளியீட்டு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.