அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 400% உயர்த்தியுள்ள சிரிய அரசு
சிரியாவின் இடைக்கால அரசாங்கம், அந்நாட்டின் அரசாங்கத் துறை ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் 400 சதவீதம் உயர்த்தவுள்ளது.
மேலும், ஆக்ககரமான முறையில் இயங்கவும் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும் ஆற்றலை மேம்படுத்தவும் அந்நாட்டின் அமைச்சுகள் அதிகாரபூர்வமாக மறுசீரமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக சம்பளம் வழங்கக் கூடுதலாக 1.65 டிரில்லியன் சிரிய பவுண்ட் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசாங்கத்திடம் இருக்கும் வளங்கள், வட்டார அளவில் பெறப்படும் உதவி, புதிய முதலீடுகள், வெளிநாடுகளில் முடக்கப்பட்டிருக்கும் சிரியாவுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் அத்தொகை திரட்டப்படும்.
“இந்நாடு எதிர்நோக்கும் பொருளியல் நெருக்கடிக்கு அவசரமாகத் தீர்வுகாண்பதற்கான முயற்சியில் இது முதல் படியாகும்,” என்று சிரியாவின் இடைக்கால அரசாங்கத்தில் நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் முகம்மது அபாஸீத், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டார்.
போர், தடை உத்தரவுகள் ஆகியவற்றால் கடந்த 13 ஆண்டுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் பொருளியலை நிலைப்படுத்தும் நடவடிக்கைகளை அந்நாட்டின் இடைக்கால அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதன் அங்கமாக அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கான இம்மாதச் சம்பளம் இந்த வாரம் வழங்கப்படும் என்று முகம்மது அபாஸீத் தெரிவித்தார்.