இளைஞர்களை அச்சுறுத்தும் Existential Crisis உணர்வு!
நீங்கள் எப்போதாவது உங்களுடைய வாழ்க்கையில் தற்போது நீங்கள் இருக்கும் இடம் உங்களுக்கானது இல்லை என நினைத்ததுண்டா? அதாவது, நீரிலிருந்து வெளியேறிய மீன் போல, இது நாம் இருப்பதற்கான சரியான இடமில்லை, உலகம் நம்மை புரிந்து கொள்வதில்லை. நாம் ஏன் இந்த உலகில் பிறந்திருக்கிறோம் என சுற்றி இருக்கும் அனைத்தையும் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் நபராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு Existential Crisis உணர்வு சார்ந்த பிரச்சினை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
Existential Crisis என்பது உங்கள் வாழ்க்கைக்கான அர்த்தம் என்னவென்று தெரியாமல், நாம் ஏன் இந்த உலகில் பிறந்தோம், ஏன் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஏன் நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரும் ஒரே மாதிரி வாழ்க்கையை வாழ்கிறார்கள் என சிந்தித்துக்கொண்டு, எதிலும் நாட்டமின்றி, நாளை என்ன செய்யப் போகிறோம் என்பதே தெரியாமல் இருப்பதாகும்.
இந்த மனநிலை நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இப்படி வாழ்க்கையை அர்த்தமில்லாததாக சிந்திப்பவர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தன் வாழ்க்கையை மேலும் மோசமாக்கிக் கொள்வார்கள். ஆனால், ஒரு சிலர் இதுபோன்ற உணர்வை சரியாகப் புரிந்துகொண்டு, தன் விருப்பத்திற்கு வாழ்க்கையை புதிதாக அமைத்துக் கொண்டு முன்னேறுவதற்கான வழியைத் தேடிக் கொள்வார்கள்.
வாழ்க்கை அர்த்தமற்றது என்ற சிந்தனை பெரும்பாலும் உலகத்தில் அனைவருக்குமே ஏதோ ஒரு தருணங்களில் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இது சார்ந்த சிந்தனைகளை அதிகமாக மனதில் போட்டு குழப்பிக் கொண்டு, எதிலுமே முறையாக கவனம் செலுத்த முடியாமல் வாழ்க்கையை வீணடிப்பவர்கள், மிகப்பெரிய பிரச்சினைகள் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே நான் கீழே கூறப்போகும் 8 அறிகுறிகள் உங்களிடம் இருந்தால், நீங்கள் Existential Crisis மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அந்த சிந்தனையை மாற்றி, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முற்படுங்கள்.
எப்போதும் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்தது போல மிகவும் குழப்பமான மனநிலையிலேயே இருப்பீர்கள்.
எந்த புதிய விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டாலும், படபடப்பு மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
வாழ்க்கையில் எதை செய்வதற்கும் உந்துதல் சரியாக இருக்காது.
அனைத்திலும் ஒரு வெறுமை சார்ந்த உணர்வு மற்றும் எந்த செயலைச் செய்தாலும் அதில் திருப்தி இல்லாதது போல் உணர்வீர்கள்.
உங்களைச் சார்ந்தே பல மோசமான கேள்விகளை கேட்டுக்கொண்டு,உங்களிடம் எந்தத் திறமையும் இல்லாதது போல் உணர்வீர்கள்.
வாழ்க்கை, உலகம், உறவுகள் என அனைத்திலிருந்தும் விடுபட்டதுபோல் தோன்றும். எதிலுமே சரியான பிடிப்பு இருக்காது.
உண்மையில் வாழ்கிறோம் என்ற எண்ணமே இருக்காது.
எதுவாக இருந்தாலும், இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும், இறுதியில் நாம் இறக்கத்தானே போகிறோம் என்ற எண்ணம் தோன்றும்.
இந்த எட்டு அறிகுறிகளும் உங்களுக்கு இருந்தால், நீங்கள் Existential Crisis-ல் இருக்கிறீர்கள் என அர்த்தம். இது சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய பிரச்சனை எல்லாம் கிடையாது. ஆனால் வாழ்க்கையில் எதிலுமே நாட்டமில்லை என்றால், தேவையில்லாததை மனதில் போட்டுக் குழப்பிக்கொண்டு இல்லாத பிரச்சினையை நாமே உருவாக்கிக் கொள்வோம் என்பது தான் உண்மை.
எனவே இதை சரியாகப் புரிந்துகொண்டு, நீங்கள் இவ்வுலகில் வாழ்வதற்கான ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.