சுவிஸ் தூதுவரை சந்திப்பதற்காக சென்றவர்களை முறையற்ற விதத்தில் சோதனையிட்ட பொலிஸார்!
உண்மை மற்றும் நல்லிணக்க ஆனைக்குழு தொடர்பான கலந்துரையாடலுக்கு பயணித்த வாகனத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்தியதுடன், உடற்பாகங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களான கண்டுமணி லவகுசராஷா, அழகுராசா மதன் ஆகியோர் பயணித்த வாகனமே நேற்றிரவு 10:30 மணியளவில் ஹபரன -கல்ஓயா சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இச்சோதனையின் போது எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்டபோது சுவிஸ் தூதுவரை சந்திப்பதற்காக கொழும்புக்கு கூட்டம் ஒன்றிற்கு செல்வதாக கூறியதன் பிற்பாடு முறையற்ற விதத்தில் உடற்பாகங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதுடன், பணப்பை கைப்பற்றப்பட்டு முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னர் வழங்கப்பட்டதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து திருகோணமலை மாவட்ட பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பொலிஸார் எம்மை அச்சுறுத்தும் நோக்குடன் செயல்பட்டதாக நாம் உணர்கின்றோம் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை கடந்த 2023/07/18ம் திகதி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராஷா திருகோணமலையில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டு மூன்று மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை நாட்டில் தற்போது சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றமை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மொரவெவ சிவில் சமூக அமைப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.