வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல்கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை -ஐயாத்துரை!
தற்போது தேர்தல் காலம் இல்லாதபடியினால் வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல்கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (22.12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசியல் கட்சிகள் சென்று பார்வையிடவில்லை என்றும் உடனடி உதவிகள் எதனையும் வழங்கவில்லை எனவும் பாதிப்புக்குள்ளான மக்கள் கடும் விசனம் தெரிவித்துவருகின்றனர்.
குறிப்பாக வன்னிப் பிரதேசத்தின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவின் அநேக பகுதிகளும் வெள்ள அனர்த்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தேர்தல் காலமாக இருக்குமாயின் குறித்த அரசியல்வாதிகள் அரை இறாத்தல் பாணும் பருப்புக் கறியுடனும் முண்டியடித்து வழங்குவது போன்று புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் தமது கருணை உள்ளங்களை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
ஆனால் இது தேர்தல் காலம் இல்லாதபடியால் எந்த அரசியல் கட்சிகளும் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. ஆயினும் இறைமையுள்ள அரசாங்கம் தனது மக்களுக்கான பணியை முன்னெடுத்து வருகின்றது. அதனை எமது கட்சி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வடக்கில் நெறிப்படுத்தி வருகின்றார்.
ஆகவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயலாப அரசியல் மனநிலையை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவுவதே சிறந்த மக்கள் சேவை ” என்றும் அவர் கூறியுள்ளார்.