2024 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிடும் புதிய விஷன் ப்ரோ ஹெட்செட்!
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அதிநவீன கண்டுபிடிப்பான விஷன் ப்ரோ ஹெட்சட்டை 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதை விற்பனை செய்வதற்கு முன்னதாக இந்த சாதனத்தைப் பற்றி அதன் விற்பனை முகவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஹெட்செட்டை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும், அதில் உள்ள அம்சங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும் தேர்வு செய்யப்பட்ட முகவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்பான விருச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜி கொண்ட விஷன் ப்ரோ ஹெட்செட்டை இந்த ஆண்டு நடந்த WWDC நிகழ்வின் போது பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியது.
இந்த சாதனம் உங்களை முற்றிலும் புதுமையான உலகத்திற்கு அழைத்துச் செல்லும் எனவும், உங்களின் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்யும் நல்ல நண்பன் எனவும் ஆப்பிள் நிறுவனம் இந்த ஹெட்செட் குறித்து விவரித்துள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், ஆடியோ, டிஸ்ப்ளே போன்ற பல சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது. இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு மணி நேரம் வரை நீடித்து உழைக்கும் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது என ஆப்பிள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இதை பயனர்கள் தங்களின் போன், டிவி, ஆடியோ சிஸ்டம் என எதுவாக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனவும், அடுத்த ஆண்டு முதல் இது விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதன் விலையாக 3,499 டாலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கலாம். 2024 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில நாடுகளில் விற்பனைக்கு வரும் இந்த ஆப்பிள் சாதனத்தை எப்படி பயன்படுத்துவது என, விற்பனை நிலையங்களில் உள்ள ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க ஆப்பில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஒரு கடைக்கு இரண்டு ஊழியர்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளனர். முதலில் பிளாக்ஷிப் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதைத்தொடர்ந்து இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என ஆப்பில் தெரிவித்துள்ளது. இந்த ஹெட்செட் பன்முகத் தன்மை கொண்ட சாதனமாக இருப்பதால் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.