சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்
சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்திற்கு அருகே வெளிநாட்டு ஊழியர்களை நபர் ஒருவர் தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
இந்த காணொளியை, It’s Raining Raincoats (IRR) என்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கான தொண்டூழிய குழு பேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளது.
38-வினாடிகள் கொண்ட அந்த காணொளி, பரபரப்பான வீதிக்கு அருகே எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அங்குள்ள கட்டுமானத் தளத்திற்கு வெளியே பாதுகாப்பு உடையில் வெளிநாட்டு ஊழியர்கள் குழு ஒன்று இருப்பதை காண முடிகிறது. அப்போது திடீரென ஒருவர், நீல நிற பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்திருந்த ஒருவரை தாக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில், இன்னொரு வெளிநாட்டு ஊழியரையும் அவர் தாக்குகிறார். அதோடு விடாமல் கீழே விழுந்த ஹெல்மெட்டை எடுத்த நபர் முதலில் தாக்கிய ஊழியரை தொடர்ந்து துரத்தித் தாக்குகிறார்.
இதனை அடுத்து அதிகமான ஊழியர்கள் அங்கு கூடியதால் தாக்குவதை அவர் நிறுத்தினார். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதாக It’s Raining Raincoats மதர்ஷிப்பிடம் கூறியது.
ஊழியர்களை தாக்கும் ஆடவர் வெளிநாட்டு ஊழியர் இல்லை என்றும் IRR குறிப்பிட்டுள்ளது. காணொளி எடுக்கப்பட்ட இடம் பற்றிய தகவல்களையும், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பற்றிய விவரங்களையும் கேட்டு IRR கோரிக்கை வைத்துள்ளது.