தென் கொரிய அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து பதவி விலகிய ஆளும் கட்சித் தலைவர்
தென்கொரியாவின் ஆளும் மக்கள் சக்திக் கட்சித் (பிபிபி) தலைவரான ஹான் டோங் ஹூன், அப்பொறுப்பிலிருந்து விலகப்போவதாக திங்கட்கிழமையன்று (டிசம்பர் 16) அறிவித்துள்ளார்.
ஹான், சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தவேண்டும் என்று குரல் கொடுத்திருந்தார். அதற்கு அவர் கட்சியில் எதிர்ப்பு இருந்தது.இருந்தாலும் அவ்வாறு செய்ததற்குத் தாம் வருத்தப்படவில்லை என்று ஹான் குறிப்பிட்டார்.
“ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்,” என்று ஹான் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“கட்சியின் மேலாண்மைக் குழு கவிழ்ந்ததால் எனது கடமைகளை நிறைவேற்றுவது சாத்தியமன்று. அதிபர் யூன் சுக் இயோல் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவது வேதனை தந்தது. அதேவேளை, அந்நடவடிக்கையை எண்ணி நான் வருத்தப்படவில்லை,” என்றார் ஹான்.
கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதியன்று ஹான், மக்கள் சக்திக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குக் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து அவர் அப்பொறுப்பிலிருந்து விலகுகிறார்.