ஐ.நா கூட்டத்தொடரில் கொக்குதொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்! மக்கள் வலியுறுத்தல்
ஐ.நா கூட்டத்தொடரில் கொக்குதொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உபசெயலாளர் சபிதா தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”யுத்தத்திற்கு பின்னர் இறந்தபெண் போராளிகள், எங்கள் பிள்ளைகளின் உடல்கள் போல் தெரிகின்றது. இதனை இங்கு கிடைக்கப்பெற்ற ஆடைகள் , உள்ளாடைகளினை வைத்து உறுதிப்படுத்த முடிகின்றது.
ஐ.நா கூட்டத்தொடர் நடக்கும் வேளையில் இது சம்பந்தமான விடயங்களை ஐநா கூர்ந்து கவனிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை ஆரம்ப காலத்தில் எம் பிரச்சினைகளை முன்னோக்கி எடுத்திருந்தாலும் இம்முறை இது பெரிய சான்றாக இருக்கின்றது.
எம் பிள்ளைகள் மிலேச்சதனமாக கொன்று குவிக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது ஒரு புதைகுழி அல்ல வடகிழக்கு பகுதிகளில் இன்னும் பல இருக்கலாம். கடந்த காலத்தில் கிருஷாந்தி போன்ற பெண் பிள்ளைகளின் மரணத்தினை சாதாரணமாக எடுத்தது போன்று இருந்தாலும் இவை தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே பார்க்கின்றோம்.
எனவே ஐக்கிய நாடுகள் சபை அவர்களை மத்தியஸ்தர்களாக முன்னிலைப்படுத்தி எமக்கு நல்லதொரு தீர்வினை பெற்றுத்தர வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.