புதிய பரிமாணத்திற்கு திரும்பிய இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் : சர்வதேச ரீதியில் அதிகரிக்கும் பதற்றம்!
இஸ்ரேலை குறிவைத்து ஈரான் தனது தாக்குதல்களை நிறுத்தியதையடுத்து லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேலிய இராணுவத்திற்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடங்கிய பின்னர் முதல் தடவையாக நில மோதல்கள் அதிகரித்துள்ளன.
இந்த மோதலின் போது 8 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ நிலைமை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
லெபனானுக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் ஏறக்குறைய ஓராண்டு காலமாக நீடித்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் புதிய பரிமாணத்திற்கு திரும்பியுள்ளது.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் இஸ்ரேலில் உள்ள வணிக இடங்கள் உள்ளிட்ட சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளன.
ஈரான் தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலியப் படைகள் லெபனானுக்குள் நுழைந்தன. அவர்கள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் லெபனானுக்குள் நுழைந்துள்ளனர்.
அங்கு இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக தரைப்படை மோதல் ஏற்பட்டது.
இஸ்ரேலிய இராணுவத்திற்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான இந்த மோதலின் போது, 8 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தை இஸ்ரேல் தற்போது எட்டியுள்ளது என்றார்.
இஸ்ரேலிய காலாட்படை இஸ்ரேலிய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களின் ஆதரவுடன் தரை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி, தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதி மற்றும் அருகில் உள்ள டஹியே நகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
லெபனான் பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்திய தலைமையகத்திற்கு அருகாமையில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று மதியம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் வசிக்கும் அமெரிக்கர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
அதன்படி, லெபனானில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல் தீவிரமடைந்த இரண்டு வாரங்களில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதற்கிடையில், ஹமாஸுடன் இணைந்த அல் கஸ்ஸாம், ஈரான் இஸ்ரேலைத் தாக்குவதற்கு முன்பு டெல் அவிவில் பதிவான கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூடு பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் காயமடைந்தார். இதற்கிடையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மருமகன் உட்பட மூவர் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து சிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இராணுவ நிலைமை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அவசர கூட்டத்தை கூட்டியிருந்தது.
ஈரானின் தாக்குதல்களை விமர்சிக்கத் தவறியதன் காரணமாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “இந்த மோதல்களினால் ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புகளை நாம் மறந்துவிடக் கூடாது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறுவதை நாம் புறக்கணிக்க முடியாது. தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில், இஸ்ரேல் அல்லது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.