ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்திற்கு முடிவுரை எழுதிய இந்திய அணி

ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்துக்கு முடிவுரை எழுதி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. துபாயில் நடைபெற்ற நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகளில் வென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்தியா.
இந்தப் போட்டியில் 264 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கில், 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்ரேயாஸ், 62 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸாம்பா பந்தில் அவர் போல்ட் ஆனார். அக்சர் படேல் 27 ரன்கள் எடுத்தார்.
கே.எல்.ராகுல் விரைந்து ரன் குவித்தார். கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிய ஷாட் ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் மூலம் சதம் விளாசும் வாய்ப்பை அவர் மிஸ் செய்தார். ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். மூன்று சிக்ஸர்களை அவர் விளாசி ஆட்டத்தில் அழுத்தத்தை குறைத்தார். 48.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நியூஸிலாந்து அல்லது தென் ஆப்பிரிக்காவை இறுதி ஆட்டத்தில் இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் பேட்டில் பட்டு லீடிங் எட்ஜ் ஆன பந்தை போதுமான டைமிங் இல்லாத காரணத்தால் அதை ஷமி மிஸ் செய்தார். இருப்பினும் இந்த இன்னிங்ஸில் ஹெட் வசம் லக் இருந்தது. இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் இளம் வீரர் கான்லி விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி.
தொடர்ந்து ஸ்மித் களத்துக்கு வந்தார். அதுவரை அமைதி காத்த ஹெட், அதிரடி மோடுக்கு மாறினார். 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக், ஷமி பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஷமி வீசிய இன்னிங்ஸின் 5-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை தடுக்கும் விதமாக 9-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தியை கேப்டன் ரோஹித் பந்து வீச செய்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஹெட் விக்கெட்டை வருண் வீழ்த்தினார். அதன் மூலம் ஸ்மித், ஹெட் கூட்டணி முடிவுக்கு வந்தது.
அடுத்து வந்த லபுஷேன், ஸ்மித் உடன் விக்கெட்டை விடாமல் ‘தட்டி தட்டி’ ரன்களை சேர்த்தார். இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தனர். அதன் பலனாக அவர்களும் 50+ ரன்கள் கூட்டணி அமைத்தனர். 36 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் லபுஷேனை ஜடேஜா எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். தொடர்ந்து இங்கிலிஸையும் ஜடேஜா அவுட் செய்தார். பின்னர் அலெக்ஸ் கேரி உடன் இணைந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்மித்.
96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்து வீச்சில் ஸ்மித் போல்ட் ஆனார். அதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா 300+ ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஸ்மித் விக்கெட் அதை மாற்றியது. மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் வெளியேறினார். அக்சர் படேல் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். அதிரடியாக ஆடி ரன் குவித்த கேரியை ரன் அவுட் செய்து ஸ்ரேயாஸ் வெளியேற்றினார். அவர் 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி.