தமிழகத்தில் நடந்த கோர விபத்து… ஒரு மணி நேர போராட்டத்தின் பின் உடலை மீட்ட பொலிஸார்!
																																		விழுப்புரம் அருகே வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி புதுச்சேரி அரசுப் பேருந்து ஒன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பனிச்சமேடு குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுநர், முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். எதிர்பாராத விதமாக எதிரில் வந்த மினி லோடு வேன் மீது அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மினி லோடு வேனை ஓட்டி வந்த புதுச்சேரி சுதானா நகரைச் சேர்ந்த ஓட்டுநர் லட்சுமி நாராயணன் (55) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மரக்காணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மினி லோடு வேனை சாலையின் ஓரத்திற்கு அப்புறப்படுத்தினர். பின்னர் ஒரு மணி நேரம் போராடி வேனில் சிக்கியிருந்த லட்சுமி நாராயணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து மரக்காணம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
        



                        
                            
