Tamil News

கடலில் விழுந்து நொறுங்கிய விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்! 5 அமெரிக்க வீரர்கள் பலி

மத்திய தரைக்கடல் பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அமெரிக்க கப்பல் படையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பல் உட்பட 10க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மத்திய தரைக் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் இருந்து அமெரிக்கர்களை வெளியேற்றும் தேவை ஏற்பட்டால், அதற்கு தயாராகும் வகையில் அமெரிக்க வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக எம்எச் 60 ரக ஹெலிகாப்டர் ஒன்றில் அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படை வீரர்கள் வானிலேயே எரிபொருள் நிரப்பும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதையடுத்து ஹெலிகாப்டர் மற்றும் அதில் பயணித்தவர்களை தேடும் பணிகளை அமெரிக்க கப்பல் படை தீவிரப்படுத்தி இருந்தது.

5 US special operations troops killed in Veterans Day weekend crash after  training 'mishap': Officials - ABC News

இந்த நிலையில் அமெரிக்க கப்பல் படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். இருந்த போதும் இந்த விபத்து எவ்வாறு நேர்ந்தது மற்றும் விமானத்தில் பயணித்தவர்களின் பெயர் விவரங்கள் ஆகியவற்றை வெளியிடப்படவில்லை.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version