சல்மான் கானின் ’டைகர் 3’ தியேட்டருக்குள் ராக்கெட் விட்ட ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ

சல்மான் கானின் ‘டைகர் 3’ முதல்நாள் முதல்காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சல்மான் கான், கத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியாகும் இந்தப் படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இதை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று (நவ.12) உலகம் முழுவதும் வெளியானது.
Tiger 3 craze Fireworks on cinema hall.#Tiger3 #Tiger3FirstDayFirstShow #Tiger3Diwali2023 #Tiger3Reviews #SalmanKhan #INDvsNED #Tiger3Review#anushkasharma #RohitSharma #crackers #KatrinaKaif #EmraanHashmi pic.twitter.com/KGJItvOpZE
— Mohd Mainulhuda Khan (@MoinulHuda7) November 13, 2023
இப்படத்தின் முதல் காட்சிக்கு நாடு முழுவதும் (தமிழகம் தவிர்த்து) 6 மணிக்கு திரையிடப்பட்டது. சல்மான் கான் ரசிகர்கள் பலரும் அதிகாலை முதலே பட்டாசு வெடித்து நடனமாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு உள்ளேயே பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சல்மான் கானின் அறிமுகக் காட்சியின் போது உற்சாக மிகுதியில் ராக்கெட் பட்டாசுகளை வெடித்தனர். அதே போல படத்தில் ஷாருக் கான் ஒரு கேமியோ ரோல் செய்துள்ளார். அவரது காட்சியின்போது ராக்கெட்டுகளை சரமாரியாக பறக்கவிட்டனர் ரசிகர்கள். இதனால் திரையரங்கம் முழுவதும் புகை மண்டலமானது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். மேலும் தியேட்டருக்குள் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த ரசிகர்களை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.