மணப்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மாப்பிள்ளை – நல்லி எலும்பு இல்லாததால் நிறுத்தப்பட்ட திருமணம்!
தெலங்கானாவில் நிச்சயதார்த்ததின் போது வழங்கப்பட்ட மட்டன் கிரேவில் நல்லி எலும்பு இல்லை என மணமகனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாம்பாத் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், ஜக்தியால் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இதன் ஒருபகுதியாக மணமகளின் வீட்டில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமணத்தை பாரம்பரியமாகவும் ஆடம்பரமாகவும் நடத்த இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மணமகளின் குடும்பத்தினர் மற்றும் மணமகனின் உறவினர்களுக்கு அசைவ உணவு ஏற்பாடு செய்தனர்.
எல்லாம் சுமுகமாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென விருந்தினர்கள் வழங்கப்பட்ட ஆட்டிறைச்சியில் நல்லி எலும்பு இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பிரச்சினை முற்றியதால் அக்கப்பக்கத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இரு வீட்டாரும் சமாதானமாகவில்லை. இதனையடுத்து திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்து மணமகன் வீட்டார் எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.
நிச்சயத்தார்த்த நிகழ்வின் போது வழங்கப்பட்ட ஆட்டிறைச்சியில் நல்லி எலும்பு இல்லை என கூறி திருமணத்தை மணமகன் வீட்டார் நிறுத்திய சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.