வடக்கின் மாபெரும் போர்: யாழ்.மத்திய கல்லூரி வெற்றி!
119 ஆவது ‘வடக்கின் மாபெரும் போர்’ கிரிக்கெட் சமரில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். சென். ஜோன்ஸ் அணி, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி, யாழ். சென். ஜோன்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 95 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
24 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ். சென். ஜோன்ஸ் அணி, உதயனன் அபிஜோய்சாந்த்தின் அதிரடியான சதத்தின் (121 ஓட்டங்கள்) உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களைக் குவித்தது.
248 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 120 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் திசோன் மற்றும் நிதர்சன் ஜோடி மீட்டெடுத்தது.
8 ஆவது விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் இணைந்து கட்டியெழுப்பிய 91 ஓட்ட இணைப்பாட்டம் யாழ். மத்திய கல்லூரியின் வெற்றியை உறுதி செய்தது.
அதிரடியாக ஆடிய திசோன் 81 ஓட்டங்களையும், நிதர்சன் 44 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக யாழ். மத்திய கல்லூரி அணியின் வெற்றிக் கதாநாயகன் திசோன் தெரிவு செய்யப்பட்டார்.





