இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டுவந்த பெண்ணுக்கு நேர்ந்தக் கதி!
இந்தியாவில் இருந்து 12 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்திய பெண்ணுக்கு 11 கோடியே எண்பது இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையை உடனடியாக செலுத்துவதற்கு உத்தரவிட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
குறித்த இந்தியப் பெண் நேற்று (22) அதிகாலை துபாயிலிருந்து 500 கிராம் எடையுள்ள நகைகளை சட்டவிரோதமான முறையில் தனது உடலிலும் கைப்பையிலும் மறைத்துக்கொண்டு நாட்டிற்கு வந்துள்ளார்.
இது தொடர்பான சுங்க விசாரணை நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலைய சிரேஷ்ட பிரதி சுங்க பணிப்பாளர் கமால் பெர்னாண்டோவினால் மேற்கொள்ளப்பட்டு, சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த நகைகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன், அதற்கான தண்டப்பணத்தையும் செலுத்துமாறு உத்தரவிட்டார்.
இதன்படி, அவர் கொண்டு வந்த நகைகளின் பெறுமதியான 12 கோடி ரூபாயும் அபராதத் தொகையான சுமார் 12 கோடி ரூபாயும் சேர்த்து ஏறக்குறைய இருபத்து நான்கு கோடி ரூபாய் பாரிய இழப்பை அந்த பெண் சந்திக்க நேரிட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.