உலக அமைதியின் எதிர்காலத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – வெளியான எச்சரிக்கை
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரினால் உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
“இரண்டு தரப்புக்கும் இடையில் தற்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரில், காசா பிரதேசத்தில் வாழும் பலஸ்தீன மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டிலும் பொதுமக்களின் உயிரிழப்புக்களும், பாதிப்புக்களும் உயர்ந்து வருகின்றன. காசா பிரதேசம் தண்ணீர் மற்றும் மின்சாரமின்றி திணறிக் கொண்டிருக்கின்றது. இதனால் காசாவில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தப்போர், இஸ்ரேலின் அரச தரப்புக்கும், பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய ஹமாஸ் அமைப்பின் தீவிரவாதத்துக்கும் இடையிலான போராக மாறியுள்ளது என்று சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
1948ல் இஸ்ரேலின் தோற்றத்துடன், தமது சொந்த பலஸ்தீன மண்ணிலிருந்து வேட்டையாடி விரட்டப்பட்ட பலஸ்தீன மக்களின் நீதிக்கான நீண்ட போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் 1993இல் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரனின் மத்தியஸ்தத்துடன், இஸ்ரேலிய பிரதமர் யிற்சாக் றபினுக்கும், பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத்துக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் விடயம் பலஸ்தீன மண்ணில் யூதர்களுக்கு இஸ்ரேலும், பலஸ்தீனிய அரபுக்களுக்கு பலஸ்தீனமும் என இரண்டு நாடுகள் அருகருகாக அமைவதற்கு வழிகாட்டிய ஒரு வரலாற்று ஆச்சரியத்தையே நிகழ்த்தியிருந்தது.
எனினும், படுகொலை செய்யப்பட்ட பிரதமர் யிற்சாக் றபினுக்குப் பிறகு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இஸ்ரேலிய தலைவர்களின் நடவடிக்கைகளால், அந்த சமாதான ஒப்பந்தம் செயல் இழந்து போனது இதனால் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையின் உச்சக்கட்டமே, இப்போது நடைபெறும் போராகும்.
இந்தப் போரில் தலையிட்டு, போர் நிறுத்தம் ஒன்றை சாதிக்கும் வல்லமை கொண்டுள்ள நாடுகள் எல்லாம், இஸ்ரேலின் பக்கமே சாய்ந்து நிற்கின்றன.
மத்திய கிழக்கின் இன்றைய நிலைமை, 14 வருடங்களுக்கு முன்னர், எமது இலங்கைத் தீவில், வன்னிப் பிரதேசத்தில் அரங்கேற்றப்பட்ட மனித அவலத்தையே ஞாபகப்படுத்துகின்றது.
இந்தநிலையில், அரசியல் நீதி கோரி நிற்கும் இலங்கைத் தமிழ் மக்கள், தம்மைப் போலவே, ஏகாதிபத்திய சக்திகளால் வஞ்சிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுடன் உணர்வுகளால் ஒன்றி நிற்கின்றனர்” என்றும் சிறிகாந்தா குறிப்பிட்டுள்ளார்.