காஸாவிலிருந்து ஒப்படைக்கப்பட்ட உடல் பிபாஸின் தாயாருடையது அல்ல ; இஸ்ரேலிய ராணுவம்

காஸாவில் வியாழக்கிழமை அன்று ஹமாஸ் ஒப்படைத்த நான்கு சடலங்களில் ஒன்று பிணைக் கைதியான ஷிரி பிபாஸ் அல்ல என்று இஸ்ரேலிய தற்காப்புப் படை தெரிவித்தது.
ஷிரி பிபாஸ், 33, தற்போது ஐந்து மற்றும் இரண்டு வயதாக இருந்திருக்கவேண்டிய அவரது இரண்டு மகன்களான ஏரியல், கஃபிர் ஆகியோர் இறந்துவிட்டனர் என்ற செய்தி இஸ்ரேலை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு மகன்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிபாஸ் குடும்படுத்திடம் இஸ்ரேலிய தற்காப்புப் படை தெரிவித்தது.
“மூன்றாவது உடல் அவர்களின் தாயார் அல்ல. எஞ்சிய பிணைக்கைதிகளின் உடல்களை ஒப்படைக்க வேண்டும்” என்று இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.ஆனால் இதற்கு ஹமாஸிடமிருந்து இதுவரை பதில் இல்லை.
“அடையாளம் கண்டறியம் நடைமுறையின்போது நான்கு சடலங்களில் ஒன்று பிபாஸ் அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எந்தப் பிணைக்கைதிகளுடனும் அந்த உடல் பொருந்தவில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இது அடையாளம் தெரியாத உடல்,” என்று எக்ஸ் பதிவில் இஸ்ரேலிய தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்த நிலையில், “இது, ஹமாஸின் தீவிர விதிமீறல்களாகும். ஒப்பந்தத்தின்கீழ் இறந்த நான்கு பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். ஹமாஸ் எங்கள் பிணைக்கைதிகளுடன் ஷரியையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும்,” என்று அது வலியுறுத்தியது.
“புலனாய்வு மற்றும் தடயவியல் கண்பிடிப்புகளின்படி நவம்பர் 2023 பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகளும் பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்,” என்று இஸ்ரேலியத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.ஆனால் இஸ்ரேலின் குண்டுவீச்சில் சிறுவர்களும் அவர்களின் தாயாரும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.