சிங்கப்பூரில் யாசகம் கேட்கும் பெண்ணின் செயல் – விசாரணையில் வெளிவந்த தகவல்
சிங்கப்பூரில் பிஷானில் உள்ள ஜங்ஷன் 8 மாலில் நின்றுகொண்டு அங்கு செல்லும் வழிப்போக்கர்களிடம் யாசகம் கேட்கும் பெண் குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாசகம் பெற்ற பின்னர், அந்த பெண் விலையுயர்ந்த பானத்தையும் கேக்கையும் வாங்கிச் சென்றதாகவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
அதாவது, S$8.50 மதிப்புள்ள The Coffee Bean & Tea Leaf நிறுவனத்தின் கேக் மற்றும் பானத்தை அந்த பெண் வாங்கி உட்கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.
யாசகம் பெற்று அவருக்கு பிடித்ததை அவர் சாப்பிட்டதை தவிர அவர் வேறு எந்த தவறும் செய்யவில்லை என கூறப்படுகின்றது. முதன்முதலில் அந்தப் பெண் குறித்த தகவல்கள் sgfollowsall.backup என்ற Instagram பக்கத்தில் வெளியிடப்பட்டன.
கடந்த ஜனவரி 15, 2024 அன்று “பசிக்கிறது உணவு வேண்டும்” என அந்த பெண் இன்னொருவரை அணுகியுள்ளார், அபோது அவர் S$4 கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதை வாங்கிக்கொண்டு, விலையுயர்ந்த பானத்தையும் கேக்கையும் ஆர்டர் செய்து அந்த பெண் வாங்கியதாக சொல்லப்பட்டுள்ளது. அவர் பல வழிப்போக்கர்களிடம் இவ்வாறு கூறி பணம் பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஷின் மின் டெய்லியிடம் பேசிய அந்த பெண், மதிய உணவு வாங்க தன்னிடம் பணம் இல்லாததால், வழிப்போக்கர்களிடம் யாசகம் கேட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், அவர் முன்னர் வரவேற்பாளராக பணிபுரிந்திருந்ததாகவும், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் வேலை செய்யவில்லை என்றும் கூறினார். கூடுதலாக, அவரது கணவர் பணக்காரராக இருந்தாலும், தன்னிடம் மிகவும் கஞ்சத்தனமாக நடந்து கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணவர் தனக்கு வெறும் S$10க்கும் குறைவாகவே தினசரி பணம் கொடுப்பார் என்றும் சில சமயங்களில் அதுவும் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.