ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள தாய்லாந்து : விரைவில் சட்டத்திருத்தம்
ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்ட வரைவுக்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே பாலினத்தவர்கள் திருமணத்திற்கு தாய்லாந்தில் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல முறை விவாதம் நடத்தப்பட்டும், எத்தகைய முடிவும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், ஒரே பாலின திருமண முறை அனுமதிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்த பியூ தாய் கட்சி கடந்த ஆகஸ்டில் ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து பிரதமர் ஶ்ரீதா தவிசின் தலைமையில் சமிபத்தில் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரே பாலினத்தவர்களுக்கான திருமண முறையை அங்கீகரிப்பது குறித்த சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த மசோதா வரும் டிசம்பர் 12ம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், அதனடிப்படையில் இனி ஆண்-பெண், கணவன்-மனைவி என்ற வார்த்தைகளுக்கு பதிலாக தனிநபர்கள், கூட்டாளிகள் என மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதனை தொடர்ந்து ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில், ஓய்வூதிய நிதி சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட உள்ளது.
ஆசியாவில் தற்போது வரை, தைவான், நேபாளம், ஆகிய நாடுகளில் மட்டுமே ஒரே பாலினத் திருமண முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.